பெண் குரலில் பேசி திருமண ஆசை, வாலிபரிடம் 20 லட்சம் ஏமாற்றிய நபர் சிறையில் அடைப்பு!

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில், பெண் குரலில் பேசி, வாலிபருக்கு திருமண ஆசைகாட்டி, 20 லட்சம் ரூபாய் ஆட்டைப்போட்ட நபர் கைது செய்யபட்டார்.

சென்னை, புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகன் ரகுராம்(39).

இவர், நுங்கம்பாக்கம், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்க்கிறார்.

ரகுராமிற்கு வீட்டில் மணப்பெண் தேடி வந்துள்ளனர்.  
அப்போது, பாலசுப்பிரமணியன் எண்ணிற்கு போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர் தன்னை கல்யாணராமன் என பேசினார். ரகுராமிற்கு வரன் தேடுவதாக அறிந்தேன்.

அண்ணன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வரன் பார்க்கிறோம். ரகுராம் ஜாதகத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். பின் இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்தனர்.

ஐஸ்வர்யாவின் மொபைல்போன் என்னை ரகுராமிற்கு தந்தனர். இருவரும் பேசி வந்தனர்.

ஐஸ்வர்யா முதலில் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறி, கூகுள் பே மூலம், ரகுராமிடம் இருந்து, 8 ஆயிரம் வாங்கினார்.

இதையடுத்து ஏதாவது காரணத்தை கூறி, ஐஸ்வர்யா, 20 லட்சம் வரை வாங்கினார். ஆனால், திருமணத்தை ஐஸ்வர்யா, கல்யாணராமன் ஆகியோர் தட்டி கழித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரகுராம், பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை.

சந்தேகம் அடைந்த ரகுராம், நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து பேசுமாறு ரகுராமிற்கு ஆலோசனை வழங்கினார்.

பின், ஐஸ்வர்யா மொபைல் போனின் டவரை வைத்து, அவரை பிடித்த  போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அவர் பெண் இல்லை ஆண் என தெரிந்தது. பெண் குரலில் பேசி, ரகுராமை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

அவரே, ஐஸ்வர்யா, அவரே கல்யாண ராமன் என தெரிந்து போலீசார் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சின்ன திருப்பதி, அண்ணாமலை நகரை சேர்ந்த தாத்தாகிரி(49) என தெரிந்தது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.