படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்டதால் மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு 5 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, காசிமேடு பகுதியில், படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில், மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

சென்னை, பிராட்வேயில் இருந்து மணலிக்கு தடம் எண் 56டி மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் நேற்று முன் தினம் சென்றுக்கொண்டிருந்தது.  

தண்டையார் பேட்டையை சேர்ந்த சுரேஷ்(46) பேருந்தை ஒட்டி வந்தார். கொருக்குப்பேட்டை, கேவிகே சாமி தெருவை சேர்ந்த ரஜினி(42) என்பவர் நடத்துனராக இருந்தார்.

அப்போது அதில், 5 நபர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணம் செய்து வந்தனர். அவர்களை டிரைவர், நடத்துனர் ஆகியோர் கண்டித்தபடி வந்தனர்.

காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக பேருந்து வந்தது. அப்போது, படிக்கட்டில் தொங்கி வந்த இருவர், கல்லால் பேருந்தின் முன் பக்கம் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.

இது தொடர்பாக காசிமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, 5 பேர் கும்பலை  தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சிசிடிவி கேமரா ஆய்வுகளை பதிவு செய்து, இன்று 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்த திலீப் குமார்(20), கார்கில் நகரை சேர்ந்த விக்னேஸ்வரன்(22), ராஜாத்தி நகரை சேர்ந்த அரசு(20), ராயபுரம், புது காமராஜ் நகரை சேர்ந்த சேதுராமன்(21), மணலி தில்லைபுரம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன்(19) ஆகியோர் என தெரிந்தது.