பேசின் பாலம் பகுதியில் வாலிபரை கொல்ல முயற்சித்த 5 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, பேசின் பாலம் பகுதியில், வாலிபரை கொல்ல முயற்சித்த வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை, புளியந்தோப்பு, சாஸ்திரி நகர், 13 வது தெருவை சேர்ந்த சூர்யா (எ) ஜெயசூர்யா (21). இவரை நரசிம்மன் நகரில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது. இது தொடர்பாக பேசின் பாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த கொருக்குப்பேட்டை மாரி (35), வெங்கடேசபுரத்தை சேர்ந்த அஜித் (எ) தோல் அஜித் (22), கஸ்தூரி பாய் காலனி மணியரசன் (22), கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக் (32), திருவிக நகர் மனோ (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொருக்குப்பேட்டை மாரிக்கும், சூர்யாவுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதும் தெரிய வந்தது.