கொலைக்கு பழி வாங்க அண்ணன் கிடைக்காத ஆத்திரத்தில், சிறுவனை வெட்டிய 4 பேர் கும்பல் கைது

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கொலைக்கு பழி வாங்க அண்ணனை தேடியபோது கிடைக்காத ஆத்திரத்தில், தம்பியை வெட்டிய நான்கு பேர் கும்பலை உடனடியாக கைது செய்தனர்.

சென்னை, காசிமேடு, இந்திரா நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் தேசப்பன். இவரின் மகன் சூர்யா (எ) வெள்ளை சூர்யா(23).

இவர், கடந்த 2020ம் ஆண்டு, திருவொற்றியூர், தாங்கல் பகுதியில், ஜெயராமன் என்பவரை கொலை செய்து, மண்ணில் புதைத்த வழக்கு உள்ளது. தற்போது, அவர் ஜாமீனில் வந்துள்ளார்.

இவரை கொலை செய்ய ஒரு கும்பல் காத்திருந்தது. இந்த நிலையில் காசிமேடு, திரோபதிஅம்மன் கோவில் திருவிழாவை பார்க்க எர்ணாவ்வூரில் இருந்து, மின்சார ரயில் மூலம் சூர்யா திருவொற்றியூர் வந்தார்.

இதை கேள்விப்பட்டு, ஜெயரமனின் உறவினர் பாலாஜி(19), சரவணன்(19), லட்சுமி நாராயணன்(19), சரத்குமார்(18) ஆகியோர், சூர்யாவை தேடினர். அவர் கிடைக்கவில்லை.

ஆத்திரத்தில் இருந்த பாலாஜி கும்பல், திருவொற்றியூர் பகுதியில், ஸ்டீல் பட்டறையில் வேலை பார்க்கும் சூர்யாவின் தம்பி ஆர்யா(15) என்பவரை பிடித்தனர்.

அவரிடம் சூர்யா மற்றும் அவரின் கூட்டாளி முகமது அலி ஆகியோரை எங்கே என கேட்டனர்.

ஆர்யா சொல்ல மறுத்ததும், அவரை, தலை-கை கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்விட்டு தப்பினர். ஆர்யா , ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார்.

திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாட்டு மந்தை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த பாலாஜி, சரவணன், லட்சுமி  நாராயணன், சரத்குமார் ஆகியோரை உடனடியாக கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.