வலுவான இந்திய அணியை வீழ்த்த முடியுமா இங்கி: சென்னையில் நாளை முதல் டெஸ்ட் தொடக்கம்

பயிற்சியில் இந்திய அணியன் கேப்டன் கோலி

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் இந்திய அணியை சென்னையில் நாளை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல்  இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன், உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அமைதியான, அலட்டிக்கொள்ளாத கேப்டன் என்ற ரஹானே தலைமையில் அணி மாறி, ஆக்ரோஷமான, உணர்ச்சிகளை வெளிக்காட்டும் கோலி தலைமைக்கு அணி மாறுகிறது.

ஆஸ்திரேலியத் தொடரை இந்திய அணி வென்று கொண்டாட்டத்தில் இருந்தபோது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீ்ட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இந்திய அணி அதிகமாகக் கொண்டாட வேண்டாம். உண்மையான அணி விரைவில் இந்தியா வருகிறது. அதை வென்றுவிட்டு வெற்றியைக் கொண்டாடட்டும்” என இங்கிலந்து அணியின் திறமையை பெருமையாகத் தெரிவித்திருந்தார். பீட்டர்ஸனின் வார்த்தைகள் இந்த டெஸ்ட் தொடரில் தெரிந்துவிடும்.

மனைவியின் குழந்தை பிறப்புக்காக விடுப்பில் சென்ற கேப்டன் விராட் கோலி முழு உற்சாகத்துடன் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது. காயத்திலிருந்து குணமடைந்து அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, ஆகியோர் வந்துள்ளது பந்துவீச்சை பலப்படுத்துகிறது.

சென்னை ஆடுகளம் முதல் இரு நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்து பவுன்ஸ் ஆகும். ஆனால் கடைசி 3 நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கும்.

இரு அணிகளுக்கும் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முக்கியம் என்பதால், நிதானமாக பேட்டிங் செய்வது அவசியம். 3-வது நாளில் இருந்து ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழலும் என்பதால், போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை இரு வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் வீரர்கள் களமிறங்கக்கூடும். சுழற்பந்துவீச்சில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால், வாஷிங்டன் சந்தர், அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு இருக்கக்கூடும், அஸ்வினுக்கும் இடம் உண்டு. குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டால், அக்ஸர் படேல் நீக்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் பும்ரா, இசாந்த் சர்மா களமிறங்க வாய்ப்பு உண்டு. சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

பேட்டிங்கில் ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப்பந்த் ஆகிய வீரர்கள் இடம் பெறவே வாய்ப்பு உண்டு. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகம்தான்.

இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது. ஆனால், இலங்கையின் ஆடுகளம், இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கையைப் போல் இந்திய வீரர்களும், ஆடுகளமும் இருக்கும் எனக் கணக்கிடுவது தவறானது.

இந்திய அணி இப்போது இருக்கும் ஃபார்மில் உள்நாட்டில் வைத்து வீழ்த்துவது கடினமான செயல். ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்டர்ஸன், பிராட் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு, லீச், மொயின் அலி, டாம் பெஸ் ஆகியோரின் சுழற்பந்துவீச்சும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கலாம்.

ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களான பெஸ், லீச் இருவரும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். இந்திய ஆடுகளங்கள் குறித்து அதிகம் அறிந்திராதவர்கள் என்பது இந்திய அணிக்கு சாதகமானது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியின் ஆடுகளத்தை நன்கு அறிந்த வீரர்களில் இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் மட்டுமே உள்ளார், அதிகமான டெஸ்ட் அனுபவம் கொண்டவீரர்களில் ஒருவர்.  

தொடக்க வீரர் கிராளே மணிக்கட்டு காயத்தால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கு விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாகும். இதனால், தொடக்க வீரர்களாக போப், லாரன்ஸ் ஆகியோர் ரோரி பர்ன்ஸுடன் களமிறங்கலாம்.

சென்னையி்ல் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.