அரசுக்கும் சமூகத்திற்குமான களப் போராளி
தமிழ் மொழிக்காக வாழ்ந்து போராடிய பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ் மொழி, தமிழ் இனம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்றையும் தனது வாழ்வின் மூச்சாகக் கருதி வாழ்ந்த அரிய தமிழறிஞர்களில் முக்கியமானவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். மொழிக்காக போராடிய கவிஞர், சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்ட அவர், தமிழ் மொழி மற்றும் தனித் தமிழ் இயக்க வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் துரைசாமி மற்றும் குஞ்சம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் முதலில் “இராஜமாணிக்கம்” என்று பெயர் சூட்டினர்.
மாணவப் பருவத்தில், தனது தந்தையின் பெயரான “துரை” மற்றும் தனது பெயரான “மாணிக்கம்” ஆகியவற்றை இணைத்து “துரைமாணிக்கம்” என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தொடக்கக் கல்வி பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் நடேசன் மற்றும் தமிழ் மறவர் பொன்னம்பலனார் போன்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் தமிழ் மொழியில் ஆழ்ந்த ஈடுபாடு உருவானது.
இலக்கிய ஆர்வத்தின் தொடக்கம்
பள்ளியில் பயிலும் காலத்திலேயே எழுத்து உலகில் அடியெடுத்து வைத்தார். “குழந்தை” என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றைத் தொடங்கினார். பின்னர் “அருணமணி” என்ற புனைப் பெயரில் “மலர்க்காடு” என்ற கையெழுத்து இதழையும் வெளியிட்டார்.
அதே காலகட்டத்தில் “மல்லிகை” மற்றும் “பூக்காரி” போன்ற கவிதைப் படைப்புகளையும் இயற்றினார்.
பின்னர் சேலம் நகராண்மை கல்லூரியில் கல்வி பயிலும் போது தமிழ் அறிஞர் தேவநேய பாவாணர் அவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்டு தனது அறிவை மேலும் விரிவுபடுத்தினார். அந்த காலத்தில் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் பெருஞ்சித்திரனாரை ஆழமாக பாதித்தன.
பாரதிதாசனை கவர்ந்த கவிதைகள்
தன் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்ட பெருஞ்சித்திரனார், தாம் எழுதிய “மல்லிகை” மற்றும் “பூக்காரி” என்ற கவிதைகளை எடுத்துக்கொண்டு பாரதிதாசனை நேரில் சந்தித்தார்.
அவரது கவிதைகளின் மொழிச்சீரும் கருத்து ஆழமும் பாரதிதாசனையே கவரும் அளவுக்கு சிறப்பாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை மற்றும் பணியியல்
கல்லூரி காலத்திலேயே கமலம் என்ற பெண்மணியை பெருஞ்சித்திரனார் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரது பெயரை “தாமரை” என மாற்றினார்.
பின்னர் புதுச்சேரியில் அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்தார். அங்கு சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். 1959 ஆம் ஆண்டு கடலூருக்கு பணியிட மாற்றம் கிடைத்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவரது பங்கு
தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் போராட்டத்திற்கு வலுவூட்டின.
அவரது எழுத்துகளும் உரைகளும் இந்தி எதிர்ப்பு உணர்வை மக்களிடையே தீவிரமாக பரப்பின. அவரது பேச்சுகளை கேட்டவர்களும் அவரது கட்டுரைகளை படித்தவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈர்க்கப்பட்டனர்.
அரசுப் பணி தனது மொழிப் பணிக்கு தடையாக இருப்பதை உணர்ந்த பெருஞ்சித்திரனார், அஞ்சல் துறையில் இருந்த பணியை ராஜிநாமா செய்து முழுநேர தமிழ் பணியில் ஈடுபட்டார்.
தமிழுக்காக சிறை சென்ற கவிஞர்
அவரது பாடல்களும் உரைகளும் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாகக் கூறி அரசு அவரை வேலூர் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்த காலத்திலேயே அவர் “ஐயை” என்ற தனித் தமிழ் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதியார்.
சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் “தமிழ்ச் சிட்டு” என்ற இதழைத் தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தமிழ் வாழ்வதற்கான அவரது பார்வை
தமிழ் மொழி வெறும் கோஷங்களால் வாழாது என்பதை பெருஞ்சித்திரனார் வலியுறுத்தினார்.
“தமிழ் வாழ்க என்று சொல்வதாலோ,
தமிழ்ப் பெயர்களை மட்டும் வைத்தாலோ தமிழ் வாழாது.”
அதற்குப் பதிலாக, தமிழின் தூய்மையையும் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிறமொழிச் சொற்களை கலந்த தமிழ் வழக்கை நீக்க வேண்டும், கடை பெயர்கள் முதல் கல்வி நூல்கள் வரை அனைத்திலும் தமிழை நிலைநிறுத்த வேண்டும், அறிவியல், கலை, கல்வி போன்ற துறைகளில் தமிழை விதைக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையை அவர் முன்வைத்தார்.
இலக்கியப் படைப்புகள்
பெருஞ்சித்திரனார் பல்வேறு துறைகளில் முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில:
- அறுபருவத் திருக்கூத்து
- ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
- இட்ட சாவம் முட்டியது
- இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
- உலகியல் நூறு
- எண்சுவை எண்பது
- நூறாசிரியம்
- நெருப்பாற்றில் எதிர்
இந்த படைப்புகள் மொழி, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சார சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன.
“பாவலரேறு” பட்டம்
தமிழுக்கு அவர் செய்த அரும் தொண்டை பாராட்டி தமிழ் அறிஞர் தேவநேய பாவாணர் அவர்களுக்கு “பாவலரேறு” என்ற பட்டத்தை வழங்கினார். அதன் பின்னர் அவர் அந்தப் பெயரிலேயே பரவலாக அறியப்பட்டார்.
மறைவு
தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பெருஞ்சித்திரனார் 1995 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தனது 62வது வயதில் காலமானார்.
அவரது எழுத்துகள், சிந்தனைகள் மற்றும் மொழிப்பணி இன்றும் தமிழ் மொழி இயக்கங்களில் வழிகாட்டியாக விளங்குகின்றன.