75 டிஜிட்டல் பேங்க் பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று நாட்டில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் மோடி தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த டிஜிட்டல் வங்கிகள் அனைத்தும் காகிதமில்லாமல் செயல்படுபவை, வங்கி வாடிக்கையாளர் சேர்ப்பு முதல் பணம் எடுத்தல், செலுத்துதல் அனைத்தும் டிஜிட்டல் முறையில் செயல்படும்.

அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் வங்கி தொடர்பாக கற்றுக்கொள்ளும் மையாகவும் செயல்படும். எந்தெந்த மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி தொடங்குவது குறித்து மத்திய அ ரசு மாவட்டங்களைப் பட்டியலை இறுதி செய்துவிட்டது.

அந்தந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்து வசதி, ரயில்வசதி, ஊழியர்கள், கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கவும் வங்கிகளை மத்தியஅரசு கேட்டுக்கொண்டுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லே, ஸ்ரீநகர், லட்சத்தீவுகள், அய்ஸ்வால், கோட்டா, நைனிடால், லக்னோ ஆகிய மாவட்டங்கள் மத்திய அரசால் டிஜிட்டல் வங்கிக்கு அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களாகும்.

இந்த மாவட்டங்களில் ஏற்கெனவே சில வங்கிகள் பணிகளைத் தொடங்கிவிட்டன. டிஜிட்டல் வங்கி தொடங்குவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் தேதி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.

75 டிஜிட்டல் வங்கி தொடங்குவது தொடர்பாக மத்திய பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் வங்கி அமைப்பு என்பது, வர்த்தகத்துக்கான மையமாகவும், குறைந்தபட்ச டிஜிட்டல் கட்டமமைப்புடன் வங்கி தொடர்பான பொருட்கள் சேவைகளை வழங்கும் அமைப்பாகும்.

டிஜிட்டல் வங்கியின் நோக்கம் என்பது, டிஜிட்டல் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும், நிதிச்சேவைக்குள் அனைவரும் வர வேண்டும் என்பதாகும்.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் வங்கிகள், கடந்த காலத்தில்டிஜிட்டல் வங்கி தொடங்கியது தொடர்பாக அனுபவம் இருந்தால், முதல்தர மற்றும் 6ம் நிலை நகரங்களில் டிஜிட்டல் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும்.