ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் ரிலீஸா? – ஏப்ரலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப் போயிருந்த திரையுலகம், கடந்த பொங்கல் பண்டிகை முதல் புத்துயிர் பெற்றுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியானதே அதற்கு முக்கிய காரணம். இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் மக்கள் கொரோனாவையும் கணக்கில் கொள்ளாமல் சாரை சாரையாக தியேட்டர்களை நோக்கி படமெடுத்தனர்.

இதனால் துவண்டுப் போயிருந்த திரைத்துறையினர் தற்போது ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியது போல உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். இதனிடையே கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட பல படங்கள் திரையரங்க வெளியீட்டுத் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் மட்டுமே ஐந்து பெரிய படங்கள் வெளியீட்டுக்காக வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. இதில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவது இன்று உறுதியாகிவிட்டது.

அதே போல கார்த்தி நடிக்கும் சுல்தான், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், சிவகார்த்திகேயனின் டாக்டர், விக்ரம் நடிக்கும் கோப்ரா ஆகிய படங்களையும் ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 மாதங்களாக திரையரங்க வாசனையையே அறியாமல் இருந்த சினிமா ரசிகர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் செம தீனி காத்திருப்பதாக தெரிகிறது.