கொரோனா 2-வது அலையைப் போல் 3-வது அலை மோசமாக இருக்காது: வைரலாஜிஸ்ட் ககன்தீப் காங் பேட்டி

புதிய உருமாற்ற கொரோனா வைரஸ் ஏதும் உருவாகாமல் இருந்தால், 2-வது அலையைப் போல் நாட்டில் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளைப் போல் 3-வது அலையில் இருக்காது என்று மூத்த வைரலாஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.

ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் தற்போது கொரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், குறிப்பாக சமூக விலகல், தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்களும், மத்திய அரசும் தெரிவித்துள்ளன.

அதேசமயம், மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலையை எதிர்பார்க்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 3-வது அலை செப்டம்பர் –அக்டோபர் மாதங்களில் வரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

காங் இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் பேராசிரியரும், மூத்த வைராலஜிஸ்டான ககன்தீப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் இப்போதுள்ள சூழலில் புதிதாக எந்த உருமாற்ற கொரோனா வைரஸும் உருவாகாமல் இருந்தால், 3-வது அலை வந்தாலும், 2-வது அலையைப் போன்று மோசமான பாதிப்புகள் இருக்காது. மக்கள் தங்களை பாதுகாக்கும் வழிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் கூட வைரஸால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது.

அதேநேரம் புதிய உருமாற்ற கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்குவதும், ஒழுங்கு முறைகளை வலிமைப்படுத்துவதும் அவசியம் மார்ச் முதல் மே மாதம் வரை இருந்த 2-வது அலையால் நாட்டின் சுகாதாரத்துறை கட்டமைப்பே திணறியது. நாம் கொரோனாவை அழித்துவிட்டோமா? இல்லை, நாம் அழிக்கவில்லை. நாம் கொரோனாவை அழிக்கப் போகிறோமா? குறுகிய எதிர்காலத்தில் அது நடக்காது.

தொற்றுநோய்களைக் கையாள்வதில் இந்திய தடுப்பூசி மருந்துத்துறை மிகவும் தனித்துவமானதுதான். ஆனால், அந்தத் துறை நீண்ட தொலைவு செல்ல வேண்டும். நாம் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அதை எதிர்காலத்துக்கும் எடுத்துச் சென்று வலிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்தார்.