கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்

நாட்டில் 30 லட்சம் வேலை காலியாக இருக்கும் நிலையில் 71 ஆயிரம் பேருக்கு மட்டும் பணிநியமன ஆணை வழங்குவது கொசுறுதான் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தைக் பிரதமர் மோடி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

இதன்படி ஏற்கெனவே நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாவில் 71 ஆயிரம் பேர் புதிதாக அரசுப்பணியில் சேர்க்கப்பட்டனர், நேற்று நடந்த நிகழ்ச்சியில் 2வது கட்டமாக 71,246 பேருக்கு வேலைநியமன பணிஆணை வழங்கப்பட்டது.

இந்த ரோஜ்கர் மேளா வழங்கும் ரயில்வேயில் இளநிலை பொறியாளர், லோகோ பைலட், தொழில்நுட்ப ஊழியர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், இளநிலை கணக்காளர், கிராமின் தக் சேவக், வருமானவரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி, பிஏ, எடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியில் இணைந்தவர்களுக்கு பணி ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில் “பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்தார் என்பதை நினைவுபடுத்திறேன்.

தற்போது மத்திய அரசு பணியிடங்களில் மட்டும் 30 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், நரேந்திர மோடி அரசு 71ஆயிரம் பேருக்குத்தான் வேலைநியமன ஆணை வழங்கியுள்ளது.

இது மிகவும் குறைவானது. காலியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது என்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கினீர்களா என்று நாட்டின் இளைஞர்களிடம் தெரிவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.