டெல்லியில் பயங்கரம்: வழிப்பறி செய்தவரை தாக்கிய பெண் குத்திக் கொலை- பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி செய்தவரை தாக்கிய பெண்ணை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர் சிம்ரன் கவுர். இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று விட்டு தனது தாய் மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர் ஒருவர், சிம்ரனின் கழுத்தில் இருந்து செயினை பறிக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண்கள் இருவரும், ஓட முயன்ற அந்த நபரின் சட்டையை பிடித்து அவரை கீழ தள்ளி தாக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து சிம்ரனை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் சற்று தூரத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சிம்ரனை சாலையில் சென்று கொண்டிருந்தவர்களுடன் அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிம்ரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் குற்றவாளியை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.