5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

2022ம் ஆண்டு நடக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அந்தக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கியஆலோசனை நடத்துகிறார்.


2022ம் ஆண்டு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இப்போதேயிருந்தே காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் அதைத் தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது.
இது தவிர கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்தும் ஆட்சி அமைக்கவிடாமல் பாஜக தடுத்துவிட்டது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா காந்தி அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் அரசு தோல்வி அடைந்தபல்வேறு விஷயங்களை எடுத்துக்கூறி மக்களிடம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரியங்கா காந்தி முயன்று வருகிறார்.

உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாதியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும்முயன்று வருகின்றன.


இந்தச்சூழலில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் இன்று தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகின்றனர்.


இது குறித்து காங்கிரஸ்கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ 5 மாநிலத் தேர்தல், காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிகள், போராட்டங்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகின்றனர்.

காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கூட்டத்தை வழிநடத்துவார். 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தனர்.


கடந்த 16ம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்துகக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்துவது என்றும் நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


காங்கிரஸ் கட்சியின் பிற அமைப்புகளான இளைஞர் காங்கிரஸ், மாணவர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், சமூக ஊடகப் பிரிவு ஆகியவை அடுத்த தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளன.

இந்தத் தீர்மானம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.