2019 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! காங்கிரஸின் திக்விஜய் சிங் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்: பாஜக கொந்தளிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த 2019ம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நடந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஸ்ரீகரில் இருந்து புல்வாமா சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அனைவரும் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக மறுநாள் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தீவிரவாதிகளின் உறைவிடங்களை விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கி அழி்த்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது.

இந்நிலையில் ஜம்முவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான திக்விஜய் சிங், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவர் பேசுகையில் “2019ம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து புல்வாமாவுக்கு 40 சிஆர்பிஎப் வீரர்கள் விமானம் மூலம் செல்ல சிஆர்பிஎப் கோரி்க்கை விடுக்கப்பட்டபோது, அதற்கு மத்தியஅரசு மறுத்துள்ளது.

அதன்பின் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது, ஆனால், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை, மத்திய அரசு பொய்களை அடுக்குகிறது” எனத்தெரிவித்திருந்தார்

திக்விஜய் சிங் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கடும் கொந்தளிப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திக்விஜய் சிங் கருத்துக்கு ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியின்போது, திக்விஜய் சிங் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் “திக்விஜய் சிங்கின் கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் உடன்பாடில்லை.

தெளிவாகக் கூறுகிறோம், திக்விஜய் சிங் கருத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி மாறுபட்டு நிற்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடாகும். ராணுவத்தின் செயல்களுக்கு எந்த விதத்திலும் சாட்சி தேவையில்லை” எனத் தெரிவித்தார்

மத்தியப்பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ என்பது பாகிஸ்தானுக்கு ஆதரவான போக்குதான். சிலநேரங்களில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதராங்கள் கேட்கிறார்கள்.

ஒருநேரத்தில் ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கேட்டார்கள், அந்த ஆதாரம்தான் ராமர்பாலம். ராணுவத்தின் மதிப்பை குறைத்துமதிப்பிட்டு காங்கிரஸ் கட்சி அவர்களை அவமானப்படுத்துகிறது.

இதன் மூலம் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதாரவானர்கள் என்பது தெரிகிறது. பாரத் ஜோடோ யாத்ரா என்னவிதமானது, கூட்டத்தைச் சேர்த்து நடப்பதா.

ராகுல் காந்தியும் ராணுவத்தின் மதிப்பை, திறமையை கேள்வி கேள்விகேட்கிறார். இது தேசபற்று அல்ல” எனத் தெரிவித்தார்.