ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை, அண்ணா நகரில் ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த இரண்டு துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர், இ பிளாக்கில் உள்ள திரிபுவனம் அடுக்குமாடி குடியிருப்பில் சஞ்சய்குப்தா(40), தொழிலதிபர்.

இவர் தனது மனைவி வினிதா குப்தா (38) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும். இவர்கள் அண்ணாநகர், 3வது அவென்யூவில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து ரூ.53 லட்சம் கடன் பெற்றிருந்தனர்.

அந்த கடன் தொகைக்கான தவணை தொகையை அவர்கள் சரியாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து வங்கி அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நீதிமன்றத்தின் மூலம் வினிதா குப்தா வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜப்தி செய்யப்பட்ட வினிதா குப்தா வீட்டுக்குள் சென்று  வங்கி அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை சோதனையிட்டனர். அப்போது, படுக்கை அறையில் இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், இதுகுறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வீட்டுக்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த வினிதா குப்தா மற்றும் அவரது கணவரின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.