கோத்ரா கலவரத்துக்கு பிந்தைய வன்முறையில் 17 பேரை கொன்ற வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம்

குஜராத்தில் கடந்த 2022ம் ஆண்டுநடந்த கோத்ரா கலவரத்துக்குபின் நடந்த வன்முறையில் 2 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்து பஞ்சமால் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ஆதாரத்தை அளிக்கும் நோக்கில் கடந்த 2002, பிப்ரவரி 28ம் தேதி கலவரம் நடந்தபின் கொலை செய்யப்பட்டவர்களின் உடலை குற்றம்சாட்டப்பட்டவர்கள் எரித்தனர் என்று அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2002ம் ஆண்டு, பிப்ரவரி 27ம்தேதி குஜராத்தில் அயோத்திக்கு சென்றுவிட்டுவந்த கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது.

இதில் 59 பேர் இறந்தபின் மிகப்பெரிய வன்முறை மாநிலத்தில் வெடித்தது. கோத்ராவில் நடந்த வன்முறையில் சிறுபான்மையினர் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இதில் கோத்ரா வன்முறைக்குப்பின் பல்வேறு நகரங்களில் மதரீதியான மோதல்கள் நடந்தன.

அதில் திலோல் எனும் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த2 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் கொலைசெய்யப்பட்டவர்களின் உடல்களையும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் தீயிட்டு எரித்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு பஞ்சமால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சின் சோலங்கி கூறுகையில் “குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக ஆதாரங்களை அளிக்கவும், திரட்டவும் அரசு தரப்பு தவறிவிட்டது.

கலவரம் நடந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் வழக்குத் தொடர்ந்து 22 பேரையும் போலீஸார் செய்தனர். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை, சாட்சிகளும் இல்லை.

அப்படியிருக்கும்போது எவ்வாறு 22 பேரையும் குற்றவாளிகள் என்று கூறமுடியும். நதிக்கரையின் ஓரத்தில் ஏராளமான எலும்புக் கூடுகளை போலீஸார் கைப்பற்றி ஆதாரமாகக் கூறினர். ஆ னால் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து, கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்ஸ் திரிவேதி, குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்ப்பளித்தார்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் 8 பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.