இப்படியா செய்வாங்க…போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய கொடுமை


போலியா சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசரை ஊற்றிய செவிலியர்களால் மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ேநற்று குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆனால், அங்கு பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்குபதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரை வழங்கியுள்ளனர்.


சானிடைசர் வழங்கப்பட்ட குழந்தைகள் அடுத்த சிறிது நேரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தன. இதையடுத்து, அந்தக் குழந்தைகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. தற்போது அந்த 12 குழந்தைகளின் உடல்நிலையும் இயல்புநிலையில் இருப்பதாக மருத்துவர்ககள் தெரிவித்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய ஆஷா பணியாளர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுகுறித்து மருத்து தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா பஞ்சால் கூறுகையில் “ குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய விவகாரத்தில் ஆஷா பணியாளர்கள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். . இதுபோன்ற கவனக்குறைவான செயல்களை அனுமதிக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.