நடுக்கடலில் படகுடன் தத்தளித்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு; சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

சென்னை, காசிமேடு மீனவர்கள் 11 பேர் ஆந்திராவில் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை, ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஜான். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 7ம் தேதி அன்று காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சோமேஷ், ஜெகன், நீலகண்டன், சூரிய நாராயணன், காமேஷ், ராஜூ, சிவாஜி, பாலையா, அப்பராவ், பாபு உள்ளிட்ட 11 பேர் கடலுக்கு சென்றனர். ஆந்திர மாநிலம், ராமையா பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் பழுது ஏற்பட்டு நின்றன. இது தொடர்பாக வயர்லஸ் மூலம் சம்மந்தப்பட்ட சென்னை மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆனால் மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற அச்சம் உறவினர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் மீன் வளத்துறை நடவடிக்கையால் கடலோர காவல் படை கப்பல், ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையில் இறங்கியது. ஆந்திரா, கிருஷ்ணாம்பட்டினம் கடல் பகுதியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விசைப்படகை கண்டுபிடித்தனர். அதில் 11 மீனவர்கள் பத்திரமாக இருந்தனர். இரண்டு விசைப்படகுகள் சென்று அவர்களை மீட்டு சென்னை கொண்டு வருகிறார்கள். படகு கடலில் மிதந்தபடி இருந்ததால் மீனவர்கள் தப்பித்தனர். மூழ்கியிருந்தால் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும் என மீன் வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.