தோனியோடு என்னை ஒப்பிடாதீர்கள்; எனக்கு அடையாளம் வேண்டும் : ரிஷப் பந்த் சரவெடி

ரிஷப்பந்த் தோனி


தோனியோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் எனக்குரிய அடையாளத்துடனே விளையாட விரும்புகிறேன் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், சிட்னியிலும், பிரிஸ்பேனிலும் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக பேட் செய்தார். சிட்னி டெஸ்டில் 97 ரன்னில் சதத்தை தவறவிட்டு பந்த் ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனை. இதனால்வெற்றி பெற வேண்டிய போட்டி டிராவில் முடிந்தது

ஆனால், பிரிஸ்பேனில் மிகச்சிறப்பாக பேட்செய்த ரிஷப் பந்த் 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


இந்நிலையில் ஆஸ்திரேலியத் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி வீரர்கள் இன்று காலை தங்கள் சொந்த நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர். ரிஷப் பந்த் டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது ரிஷப்பந்திடம் “ தோனியுடன், உங்களை ஒப்பிட்டு பேசுகிறார்களே” என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரிஷப்பந்த் சிரித்துக்கொண்டே “ மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி போன்ற சிறந்த வீரருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

ஆனால், என்னைப் பொருத்தவரை தோனியுடன் மட்டுமல்ல எந்த வீரருடன் ஒப்பிடவும் நான் விரும்பவில்லை. இந்தியக் கிரிக்கெட்டில் நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். எனக்குரிய அடையாளத்துடன் விளையாடவே நான் விரும்புகிறேன்.

ஆதலால், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சிறிய வீரரை ஒப்படாதீர்கள். ஆஸ்திரேலியாவில் நாங்கள் விளையாடிய விதம் குறித்து ஒட்டுமொத்த அணியும் மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.