கங்கை அமரன் மனைவி மறைவு – பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரின் தாயார் மணிமேகலை காலமானார். அவருக்கு வயது 69.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். ‘மௌன கீதங்கள்’, ‘வாழ்வே மாயம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ‘கோழி கூவுது’, ‘கரகாட்டக் காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.

கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். பிரேம்ஜி நகைச்சுவை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.

கங்கை அமரனின் மனைவியான மணிமேகலை உடல் நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (மே.09) இரவு 11.30 மணியளவில் மணிமேகலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.