அப்டேட் கேட்டு தவமிருந்த ரசிகர்கள்… இணையத்தில் கசிந்த ‘வலிமை’ புகைப்படம்- படக்குழுவினர் அதிர்ச்சி

Hyderabad

கடந்த 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இதை சதுரங்க வேட்டை, தீரன்: அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியால் ஹெச்.வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதரபாத் உள்ளிட்ட பகுதிகள் நடைபெற்ற வந்தது.

படம் தொடங்கிய போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதோடு சரி, அதன் பிறகு படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர்களது ரசிகர்கள் படக்குழுவினரின் சமூக வலைதளப்பக்கங்களுக்கு சென்று அப்டேட் கேட்பது வழக்கம்.

ஆனால் அஜித் ரசிகர்கள் ஒருபடி மேலாக சென்று தயாரிப்பாளராக போனி கபூரின் ட்விட்டர் பக்கத்தில் காத்திருந்து அவர் பகிரும் அனைத்து பதிவுகளுக்கும் வலிமை அப்டேட் வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து வந்தனர். இதனால் எரிச்சலடைந்த படக்குழு முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் வலிமை அப்டேட்டுக்காக தவமிருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அஜீத் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் #Valimaiதிருவிழாஆரம்பம் என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆரம்பம் முதல் வலிமை படம் குறித்து ரகசியம் காத்து வந்த படக்குழுவினருக்கு இந்த புகைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.