அந்நியன் கதை விவகாரம்: ஷங்கருக்கு புதிய சிக்கல்

2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்நியன்’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள ‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தி ரீமேக் அறிவித்தவுடன் ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்குக் கடிதமொன்றை அனுப்பினார்.

அதில் ” ‘அந்நியன்’ கதைக்கான உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்ட விரோதமானது” என்ற நீண்ட கடிதத்துடன் நோட்டீஸும் அனுப்பினார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய கடிதத்துக்கு, இயக்குநர் ஷங்கர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அந்நியன் படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது, படத்தின் டைட்டிலிலும் அப்படித் தான் வருகிறது. சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால், அந்நியன் கதையை பயன்படுத்த எனக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது என விளக்கமளித்தார்.

இந்தப் பிரச்சனையை ரவிச்சந்திரன் தற்போது சௌத் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்சுக்கு (SICC) கொண்டு சென்றிருக்கிறார். இதில் ரவிச்சந்திரன் உறுப்பினராக உள்ளார். SICC-ன் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இந்தப் பிரச்சனையில் விளக்கம் கேட்டு ஷங்கருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றார். பொதுவாக ஒரு படத்தின் கதைக்கான உரிமை தயாரிப்பாளரிடம் தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். தங்கள் உறுப்பினர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து விட்டே, ஷங்கரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

You may have missed